search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாரியம்மன் கோவில்"

    மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் வலங்கைமான் மகா மாரியம்மனை வேண்டிக்கொண்டால் தீராத நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
    சுவாமி : அருள்மிகு மகா மாரியம்மன்

    தலச்சிறப்பு : மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் இந்த அம்பாளை வேண்டிக்கொள்வர். நோய் குணமானவுடன், 'பாடைகாவடி' எடுத்து பிரார்த்தனையை நிறைவேற்றுவர். பக்தர்கள், "தன் உடல் நலமடைந்தால் உற்சவ காலத்தில் பாடை மீது படுத்து ஆலயத்தை வலம் வருவதாக வேண்டிக் கொள்வர்". பங்குனி மாதம் நடைபெறும் உற்சவத்தின் போது ஆயிரக்கணக்கான பாடை வழிபாடுகள் நடைபெறும்.

    உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் பாடை மீது படுக்க, கயிறால் கட்டுவர். பிறகு சுமந்து வருவர். கொள்ளிச் சட்டி எடுக்க வேண்டிய முறை உள்ளவர் அதனை எடுத்துக் கொண்டு முன்னால் வருவார். இவர்கள் ஆலயத்தை வலம் வந்ததும் பாடை பிரிக்கப்படும். பிரித்ததும் மஞ்சள் நீரைத் தெளிக்க, படுக்கும் போது மயக்கமுற்றவர் தெளிந்தெழுவார். வேண்டுதல் நிறைவேற்றப்பட்டதும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவார்கள். இப்படிப்பட்ட பாடைக் காவடி வழிபாடுகளை ஏற்பதுதான் இந்த மாரியம்மனுக்குச் சிறப்பாகும்.

    தல வரலாறு : வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் காதக் கவுண்டர் என்பவர் வசித்து வந்தார். அவர் மனைவி பெயர் கோவிந்தம்மாள். இருவரும் இறைபக்தி மிக்கவர்கள். காதக் கவுண்டர் விவசாய வேலை செய்து வந்தார். அவர் மனைவி பக்கத்துக் கிராமங்களுக்குச் சென்று தின்பண்டங்கள் விற்கும் அங்காடி வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்திற்காகப் புங்கஞ்சேரிக்கு கோவிந்தம்மாள் சென்றிருந்தார். அன்று வெள்ளிக்கிழமை, நல்ல வியாபாரம் நடந்தது நெல்லும், காசும், நிறையக் கிடைத்தன. எல்லாம் இறையருள் என்றெண்ணிக்கொண்டு மகிழ்ச்சியாக, அங்குள்ள ஒரு குளத்திற்கு குளிக்கச் சென்றார்.

    அப்போது, ஒரு பிராமணரும் அவரது மனைவியும் குழந்தையுடன் அங்கிருந்த அடைக்கலங்காத்த அய்யனார்கோயில் பக்கம் போவதைப் பார்த்தார். குளித்துவிட்டுக் கரையேறிய பின் அய்யனார்கோயில் பக்கமிருந்து குழந்தை அழும் குரலைக் கேட்டார் கோவிந்தம்மாள். அங்கே விரைந்து சென்ற கோவிந்தம்மாள், பெண் குழந்தை ஒன்று அங்கே அழுது கொண்டு இருப்பதைக் கண்டாள். தெருக்காரர்கள் ஓடி வந்தனர், குழந்தையைக் கொண்டு வந்து விட்டவர்களைத் தேடிப் பார்த்தனர். அங்கு யாரும் தென்படவில்லை. அழுது கொண்டிருந்த அந்தக் குழந்தையைக் கோவிந்தம்மாள் தூக்கினாள். குழந்தை அழுவதை மறந்து அழகாகச் சிரித்தது.

    அந்தக் குழந்தையின் அழகில் மயங்கிய அத்தெருவாசிகள் அனைவரும் அக்குழந்தையைத் தாமே வளர்க்க வேண்டுமென்று போட்டியிட்டனர். கடைசியாக அந்தக் தெரு நாட்டாண்மைக்காரர் வளர்ப்பார் என்ற முடிவுக்கு வந்தனர். தனக்கு குழந்தை கிடைக்கவில்லையே என்று கோவிந்தம்மாளுக்கு வருத்தம். புங்கஞ் சேரியில் கோழிகளும், ஆடு, மாடுகளும் திடீரென இறக்கத் தொடங்கின பலருக்கு அம்மை நோய் தாக்கியது. அய்யனார் கோயிலில் கிடைக்கப் பெற்ற அந்தப் பெண் குழந்தைக்கும் அம்மை வார்த்து விட்டது, ஊரே பெரும் துயரம் அடைந்தது. இந்நிலையில் ஒருவர் ஆவேசம் வந்து, அந்தப் பெண் குழந்தையைக் கோவிந்தம்மாளிடம் கொடுத்துவிட வேண்டும். அப்போதுதான் இந்த ஊர் நலம் பெறும் என்று கூறினார்.

    ஊடனே கோவிந்தம்மாளை அழைத்து அக்குழந்தையைக் கொடுத்துவிட்டனர். குழந்தையை எடுத்து வந்து சீதளா எனப் பெயரிட்டுக் கோவிந்தம்மாள் வளர்க்கத் தொடங்கினாள். ஆனால் கடுமையான அம்மையால் மூன்றாம் நாள் அக்குழந்தையின் உயிர் பிரிந்து விட்டது. ஆறாத்துயரம் அடைந்த கோவிந்தம்மாளும் அவர் கணவரும், குழந்தையின் உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து தம் வீட்டு கொல்லையில் அடக்கம் செய்து விட்டனர். (சிலர் அக்குழந்தை ஏழரை ஆண்டுகள் கோவிந்தம்மாள் வீட்டில் வளர்ந்து பல அற்புதங்களைச் செய்து, பின்னரே இறந்ததாகவும் கூறுகிறார்கள்).

    பின்னர், குடமுருட்டி ஆற்றில் நீராடிவிட்டு வருவோரில் சிலர், கோவிந்தம்மாள் வீட்டுக் கொல்லைப்புறம் வந்த போது ஆவேசமாக வந்து ஆடினர். அவர்கள் நான்தான் மாரியம்மன் குழந்தை வடிவில் இங்கு வந்தேன். என்னை வழிபடுவோருக்கு அருள் புரிவேன் என்று கூறினார். அன்தபடி குழந்தையைச் சமாதி செய்த இடத்தில் கீற்று கொட்டகை போடப்பட்டது மக்கள் வந்து வழிபடத் தொடங்கினர் பின்னர் அவ்விடத்தில் கோயிலும் எழுப்பப் பெற்றது சீதளாதேவி மகாமாரியம்மன் கோயிலாகப் பெயர் பூண்டு வரந்தரும் தெய்வமாக அன்னை பராசக்தி அங்கே விளங்கலானாள். அதுவே வலங்கைமான் மாரியம்மன் கோயில் தோன்றி வளர்ந்த வரலாராக கூறப்படுகிறது.

    நடைதிறப்பு : காலை 5.30 மணி முதல் பிற்பகல் 1.00 வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை, ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் நடைசாத்தப்படுவது இல்லை.ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 11.00 மணி வரை நடைதிறந்து இருக்கும்.


    கோயில்முகவரி : அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்,
    வலங்கைமான் - 612 804,
    திருவாரூர் மாவட்டம்.

    தொலைபேசி எண் : 04374-264575
    காரிமங்கலம் அருகே நேற்று இரவு கோவில் உண்டியலை உடைத்து 3 பவுன் நகை மற்றும் ரூ.6 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே அடிலம் ஊராட்சி உட்பட்ட ஏ. சப்பாணிப்பட்டி கிராமத்தில் மஹா சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோவிலை நேற்று இரவு பூசாரி வழக்கம்போல் பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை பூசாரி மீண்டும் கோவிலை திறக்க வந்தார்.

    அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து ரூ.6 லட்சம் பணத்தையும், 3 பவுன் தங்க நகை மர்ம நபர்கள் கொள்ளையடித்தது சென்றது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு காரிமங்கலத்தை அடுத்த அனுமந்தபுரத்தில் உள்ள முருகன் மற்றும் மாரியம்மன் கோவில்களில் பணம், நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுபோன்று அள்ளிகுட்டை பகுதியில் உள்ள மாரியம்மன்கோவிலிலும் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

    காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மர்ம நபர்கள் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து சம்பந்தபட்ட போலீசார் அந்தந்த பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு மர்ம நபர்களை கண்காணித்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூச தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச தெப்ப உற்சவம் கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் மாலை அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது. முன்னதாக காலை 10 மணிக்கு கோவிலில் இருந்து அம்மன் பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து மாலை 5 மணிக்கு அபிஷேகமும், 7 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்மனை எழுந்தருள செய்து தெப்ப உற்சவம் நடைபெற்றது. தெப்பம் குளத்தில் 3 முறை வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர், அம்மன் வீதியுலா வந்து ஆஸ்தான மண்டபம் சென்றடைந்தார்.

    இன்று(திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு அம்மன் தைப்பூசத்திற்கு கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயம் கண்டருளி நொச்சியம் வழியாக வட திருக்காவிரி சென்றடைகிறார். தொடர்ந்து மாலை 3.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளுதல் நடைபெறுகிறது. இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீரங்கம் ரெங்கநாதரிடம் இருந்து சீர் பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நள்ளிரவு 1 மணி முதல் 2 மணி வரை அம்மனுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.

    நாளை(செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து காலை 6 மணிக்கு வட காவிரியிலிருந்து அம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக வழிநடை உபயங்கள் கண்டருளி இரவு 10 மணிக்கு ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார். இரவு 11 மணிக்கு அபிஷேகமும், நள்ளிரவு 12 மணிக்கு கேடயத்தில் அம்மன் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து அர்த்தஜாம பூஜை நடைபெற்று கோவில் நடை சாத்தப்படுகிறது.

    சமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூச திருவிழாவையொட்டி மாரியம்மன் இன்று மாலை 3 மணிக்கு கொள்ளிடம் வடதிருக்காவிரியில் தீர்த்தவாரி கண்டருள செல்வதால் மாலை 3.30 மணி முதல் கோவில் நடை சாத்தப்படும் என்றும், பின்னர் நாளை காலை 5.30 மணிக்கு வழக்கம் போல் கோவில் நடை திறக்கப்பட்டு மூலஸ்தான அம்பாள் சேவை நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான விழா வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது.
    திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது.

    அன்று அம்மன் குமாரிகா அம்சத்திலும், 11-ந் தேதி திருமூர்த்தி, 12-ந் தேதி கல்யாணி (துர்க்கை), 13, 14, 15-ந் தேதிகளில் முறையே ரோகிணி, காளகா, சண்டிகா அம்சத்திலும் (மகாலெட்சுமி) 16,17,18-ந் தேதிகளில் சாம்பவி, துர்க்கா, ஸுபத்ரா (சரஸ்வதி) ஆகிய அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    10-ந் தேதியிலிருந்து காலையிலும், மாலையிலும் பரதநாட்டியம், ஆன்மிக சொற்பொழிவு, பக்தி இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 19-ந் தேதி இரவு 7.30 மணிக்கு அம்மன் புறப்பாடாகி வன்னிமரம் அடைந்து அங்கு அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இவ்விழாவின் ஒவ்வொரு நாளும் மாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. கோவிலின் மேற்கு பிரகார நவராத்திரி மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் குமரதுரை தலைமையில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் ஆவணி தேரோட்டம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
    தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களுள் ஒன்றாகும். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.

    ஒவ்வொரு ஆண்டும் ஆவணி திருவிழா இக்கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு ஆவணி திருவிழா கடந்த மாதம் 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து 12-ந் தேதி இரவு முத்துப்பல்லக்கில் அம்மன் வீதியுலாவும், 14-ந் தேதி முத்துப்பல்லக்கு விடையாற்றி விழாவும் நடந்தது.

    ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், கடைசி ஞாயிற்றுக்கிழமையான நாளை மாலை 3 மணிக்கு நடக்கிறது. அதனைத்தொடர்ந்து 18-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை கொடியிறக்கும் நிகழ்ச்சியும், 23-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு தெப்பத்திருவிழாவும், 25-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) தெப்ப விடையாற்றி விழாவும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் பரணிதரன், கண்காணிப்பாளர்கள் சுரேஷ், மாதவன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் பிரசித்தி பெற்ற பேட்டை மாரியம்மன் மற்றும் புதுமாரியம்மன் கோவில்கள் உள்ளது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் பிரசித்தி பெற்ற பேட்டை மாரியம்மன் மற்றும் புதுமாரியம்மன் கோவில்கள் உள்ளது. ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், விபூதி, திருமஞ்சனம், சந்தனம், மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, ஆராதனை நடைபெற்றது.

    இதில், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல், நன்செய் இடையாறு மகாமாரியம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், கொந்தளம் மாரியம்மன், ஆனங்கூர் மாரியம்மன், சேளுர் மாரியம்மன், கபிலர்மலை மாரியம்மன் மற்றும் பல்வேறு ஊர்களில் உள்ள மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடிமாத 2-வது வெள்ளியை முன்னிட்டு நேற்று பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
    திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தமிழ்நாட்டில் பழனிமுருகன் கோவிலுக்கு அடுத்தப்படியாக பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவது சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குத்தான். இக்கோவிலுக்கு வெள்ளி, ஞாயிறு, செவ்வாய் போன்ற தினங்களிலும், அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களிலும் அம்மனை தரிசனம் செய்வதற்காகவும், நோய் நொடியில்லாத வாழ்க்கை அமையவும், செல்வ செழிப்போடு குடும்பம் விளங்கவும் வேண்டிக்கொண்டு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் பாத யாத்திரையாகவும், கார்,வேன் போன்ற வாகனங்களிலும், சமயபுரம் வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.

    அதன்படி நேற்று ஆடிமாத 2-வது வெள்ளிக்கிழமை என்பதாலும், பவுர்ணமி என்பதாலும், ஆடிமாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதாலும் காலை 5 மணியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சமயபுரத்திற்கு வந்தனர். அவர்கள் கட்டண வரிசையிலும் பொது தரிசன வரிசையிலும், நீண்ட வரிசையில் நின்று அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். மேலும் நெய்தீபங்கள் ஏற்றியும், கோவிலின் நுழைவு வாயிலில் தேங்காய் உடைத்தும், ஏராளமான பெண்கள் வணங்கினர்.

    சில பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து வந்தும், அக்னி சட்டி ஏந்தியும் வந்து அம்மனை பயபக்தி யுடன் வணங்கினர். பக்தர் களின் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பில் திருச்சி மற்றும் துறையூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பாதுகாப்பு பணியிலும், பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியிலும் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் தலைமையில் ஏராளமான போலீசார், ஊர்க்காவல் படையினர் மாரியம்மன் கோவில் பணியாளர்களும் ஈடுபட்டனர்.

    இதேபோல் திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் உள்ள சின்னாண்டவர், பெரியாண்டவர் கொடிமரம் முன்பாக பூஜைகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து விசாலாட்சி அம்பாள், துர்க்கை அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றன. இதில் திருப்பைஞ்சீலி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதே போல் திருப்பைஞ்சீலி வனத்தாய் அம்மன் கோவில், இனாம்சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில், போஜீஸ்வரர் கோவில், மாகாளிக்குடி உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது. முன்னதாக காவிரியாற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு மதுரை காளியம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு மதுரைவீரன், கருப்பண்ணசாமி ஆகிய பரிவார தெய்வங்களுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. உற்சவ அம்மனுக்கு 108 புடவைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் நடைபெற்ற பவுர்ணமி பூஜையில் தொட்டியம், சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். 
    பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை பயபக்தியுடன் வழிபாடு செய்தனர்.
    சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது ஆகும். இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வெள்ளி, ஞாயிறு, செவ்வாய் போன்ற தினங்களிலும், அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களிலும் அம்மனை தரிசனம் செய்வதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாகவும், கார், வேன் போன்ற வாகனங்களிலும் வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.

    அதன்படி நேற்று அமாவாசை என்பதால் அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் சமயபுரத்திற்கு வந்தனர். அவர்கள் கட்டண வரிசையிலும், பொது தரிசன வரிசையிலும் என நீண்ட வரிசையில் நின்று அம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர்.

    பக்தர்களின் வசதிக்காக திருச்சி மற்றும் துறையூரில் இருந்து சமயபுரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பாதுகாப்பு பணியிலும், பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியிலும் சமயபுரம் போலீசாரும், மாரியம்மன் கோவில் பணியாளர்களும் ஈடுபட்டனர்.

    இதேபோல் இனாம்சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில், போஜீஸ்வரர் கோவில், மகாளிக்குடி உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவில், திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை வழிபட்டனர். 
    காக்கும் தெய்வமாகவும், கிராம தேவதையாகவும் விளங்கும் மாரியம்மனுக்கு மடப்புரம் கிராமத்தில் ஒரு ஆலயம் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    வீர உணர்வுக்கு காளியையும், பகைவரை வெல்ல துர்க்கையையும், கல்வி பெருக கலைமகளையும், செல்வம் செழிக்க திருமகளையும், மழை வளம் பெருகவும், நோய் நொடிகள் அகலவும் மாரியம்மனையும் வழிபடுதலை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

    மகமாயி, சீதளாதேவி, கருமாரி, ரேணுகாதேவி என பலப் பெயர்களால் மாரியம்மனை மக்கள் பக்தியுடன் பூஜை செய்து வணங்குகின்றனர். காக்கும் தெய்வமாகவும், கிராம தேவதையாகவும் விளங்கும் மாரியம்மனுக்கு மடப்புரம் கிராமத்தில் ஒரு ஆலயம் உள்ளது.

    இந்த ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் வெளியே ஆல், வேம்பு மரங்களும் அதன் கீழ் விநாயகர், நாகர் சிலைகளும் காணப் படுகின்றன. ஆலய முகப்பின் மேல்புறம் மகிஷாசுரமர்த்தினியின் திருமேனி சுதை வடிவில் உள்ளது. ஆலயத்தின் உள்ளே கருவறை எதிரில் சூலமும் அடுத்து கழுமரமும் இருக்கிறது. அடுத்து பித்தளை உலோக சூலமும், மின்னடையான் என அழைக்கப்படும் பலிபீடமும் உள்ளது. அருகே தல விருட்சமான வேப்பமரம் உள்ளது.

    திருச்சுற்றில் தெற்கில் பேச்சியம்மன், கருப்பண்ணசாமி, ஓம்சக்தி அம்மன் சன்னிதிகள் உள்ளன. வடக்கில் காத்தவ ராயன் சன்னிதி உள்ளது. அடுத்துள்ள மகாமண்டபத்தில் காத்தவராயன், கருப்பண்ணசாமி, மாரியம்மன் ஆகியோரது மரச்சிலைகள் உள்ளன. மேற்கில் கஜ லட்சுமியின் திருமேனி காணப்படுகிறது.

    அடுத்துள்ள அர்த்தமண்டபத்தில் விநாயகர், அம்பாளின் உற்சவர் சிலைகள் உள்ளது. கருவறையில் அன்னை மாரியம்மன் இரு கரங்களில் அபய வரத முத்திரைகளுடன், அமர்ந்த நிலையில் கீழ்திசை நோக்கி இன்முகம் மலர அருள்பாலிக்கிறாள். இந்த அம்மனின் கருணை அளப்பரியது என்கின்றனர் ஊர் மக்கள்.

    அடிக்கடி நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளை அம்மனுக்கே தத்து கொடுத்துவிடுகின்றனர். குழந்தையை பெற்றவர்கள் குழந்தையுடன் அம்மன் சன்னிதிக்கு வருகின்றனர். அர்ச்சகர் ஒரு மரக்காலில் தவிட்டை நிரப்பி, குழந்தையின் பெற்றோர்களிடம் கொடுக்க, அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தங்களது குழந்தையை, அம்பாளுக்கு தத்துக் கொடுக்கின்றனர். அன்று இரவு அந்தக் குழந்தை பெற்றோர்களுடன் தங்குவது கிடையாது. வேறிடத்தில் தங்க வைக்கப்படும். இப்படி தத்துக் கொடுக்கப்படும் குழந்தை சில நாட்களில் பரி பூரண குணமடைவது கண்கூடான உண்மை.

    குழந்தைக்கு நோய் குணமானதும், அந்தக் குழந்தையின் பெற்றோர், அம்பாளின் சன்னிதிக்கு சென்று இறைவிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, குழந்தையை திரும்பப் பெறும் வைபவம் அடிக்கடி நடைபெறும் ஒரு நிகழ்வாகும்.

    இந்த ஆலயம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ஆரம்பத்தில் கீற்றுக்கொட்டகையில் இருந்த அன்னை, தற்போது அழகிய ஆலயத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறாள். ஆலயத்தில் நடைபெறும் திருவிழாக்களுக்கு பஞ்சமில்லை. மார்கழி மாதம் 30 நாட்களும் அதிகாலையிலேயே ஆலயம் திறக்கப்பட்டு அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஆடி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமை சுமார் 200 பெண்கள் கலந்து கொள்ளும் விளக்கு பூஜை நடைபெறுகிறது. சித்திரை மாதம் 10 நாட்கள் நடைபெறும் திருவிழா மிகவும் பிரசித்தமானது.

    நாள் காப்பு கட்டுதலுடன் தொடங்கும் திருவிழாவில், முதல் நாள் கரகம் புறப் படுவதுடன் அன்ன வாகனத்தில் அன்னை வீதியுலா வருவாள். இரண்டாம் நாளும் அன்னவாகனத்தில் வீதியுலா வரும் அன்னை, மூன்றாம் நாள் வேப்பிலை அலங்காரத்திலும், நான்காம் நாள் பல்லக்கிலும், ஐந்தாம் நாள் சப்பரம் எனும் தெருவடைச்சானிலும், ஆறாம் நாள் ஓடத்திலும், ஏழாம் நாள் ரிஷப வாகனத்திலும் வீதியுலா வரும் காட்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும். 8-ம் நாள் தீமிதி உற்சவம் கோலாகலமாக நடைபெறும். 9-ம் நாள் மஞ்சள் நீர் விளையாட்டு நடைபெற்று காப்பு களைதலுடன் உற்சவம் நிறைவு பெறும்.

    இங்கு அருள்பாலிக்கும் ஓம்சக்தி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். இந்த அன்னையின் பின்புறம் உள்ள வேப்பமரம் இயல்பாகவே தோன்றி, அன்னையின் சக்தியை வெளிப்படுத்தும் காரணியாக அமைந்துள்ளது.

    ஆலயம் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    தன்னை நாடும் பக்தர்களின் அனைத்து குறைகளையும் அறிந்து அருள்பாலித்து அவர்களை குறையின்றி வாழ வைக்கும் மடப்புரம் மாரியம்மனை நாமும் ஒரு முறை தரிசித்து பயன்பெறலாமே.

    அமைவிடம்

    நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், செம்பனார் கோவிலுக்கு கிழக்கே காளஹஸ்திநாதபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மடப்புரம் கிராமம். 
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர்.
    திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தமிழ்நாட்டில்் பழனிமுருகன் கோவிலுக்கு அடுத்தபடியாக பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவது சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குத்தான். இக்கோவிலுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற தினங்களிலும், அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களிலும் அம்மனை தரிசனம் செய்வதற்காக திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் பாத யாத்திரையாகவும், கார்,வேன் போன்ற வாகனங்களிலும், சமயபுரம் வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.

    அதன்படி நேற்று அமாவாசை தினம் என்பதால் காலை 5 மணியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சமயபுரத்திற்கு வந்தனர். அவர்கள் கோவிலின் கிழக்கு பகுதியின் முன்புறத்தில் நெய்தீபங்கள் ஏற்றியும், கட்டண வரிசை, பொது தரிசன வரிசையிலும், நீண்ட வரிசையில் நின்று அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.

    பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பில் திருச்சி மற்றும் துறையூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பாதுகாப்பு பணியிலும், பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியிலும் சமயபுரம் போலீசாரும் மாரியம்மன் கோவில் பணியாளர்களும் ஈடுபட்டனர். இதே போல் இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில், போஜீஸ்வரர் கோவில், மகாளிக்குடி உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவில், திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சாமியை வழிபட்டனர். 
    சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றசமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தின் 3-ம் நிலை கட்டுமான பணி நிறைவு பெற்றது.
    சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவேண்டுமென்பது இந்துக்களின் ஆகம விதியாகும். அதன்படி இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

    கோவிலின் முன்பகுதியான கிழக்கு பக்கத்தில் ராஜகோபுரம் கட்டுவதற்காக கோவில் நிதி ரூ.2½ கோடியில் சுமார் 30 அடி உயரத்தில் கல்காரம் கட்டும் பணி நடைபெற்று முடிந்தது. மேலும் கோவிலின் வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டன. இந்நிலையில் ராஜகோபுரம் கட்டும் பணி மேலும் காலதாமதம் ஆகும் என்பதால் முதல் கட்டமாக வடக்கு, தெற்கு, மேற்கு போன்ற பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட கோபுரங்களுக்கு கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.


    சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தின் 3-ம் நிலை கட்டுமான பணி நிறைவடைந்த நிலையில் கான்கிரீட் போடும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.

    இந்நிலையில் விரைவில் ராஜகோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டுமென்று பக்தர்கள் வேண்டுகோள் வைத்திருந்தனர். இதைத்தொடர்ந்து பரமத்தி வேலூரை சேர்ந்த பொன்னர்சங்கர் என்ற உபயதாரர் ராஜகோபுரம் கட்டித்தர முன் வந்தார். இதையொட்டி திட்ட மதிப்பீடு செய்து ரூ.2½ கோடி செலவில் 73 அடி உயரத்தில் 7 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கியது.

    இந்த பணியில் நாமக்கல்லைச் சேர்ந்த ஸ்தபதிகள் சதாசிவம், பாஸ்கரன் மற்றும் முருகன் ஆகியோர் மேற்பார்வையில் சுமார் 40 பணியாளர்கள் சமயபுரத்திலேயே தங்கியிருந்து கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராஜகோபுரத்தின் மூன்றாம் நிலை கட்டுமான பணி நிறைவு பெற்று நேற்று கான்கிரீட் போடும் பணி நடைபெற்றது. இதற்காக காலை 9.40 மணிக்கு மஞ்சளால் செய்யப்பட்ட விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கான்கிரீட் போடும் பணி தொடர்ந்து நடைபெற்றது. அனைத்து பணிகளும் நிறைவடைந்தவுடன் இன்னும் ஒரு வருடத்திற்குள் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
    கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அமராவதி ஆற்றில் கம்பம் விடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக கரூர் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற தலமாக இருக்கிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத திருவிழா சிறப்பாக நடைபெறும். அப்போது கம்பம் நடுதலும், அதனை அமராவதி ஆற்றில் விடுவதும் விமரிசையாக நடக்கும் நிகழ்வுகளாகும்.

    இந்த ஆண்டு கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி மாத திருவிழா கடந்த 13-ந்தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. அன்றைய தினம் கோவில் பரம்பரை அறங்காவலருக்கு அசரீரியாக அம்மன் வாக்கு கூறியதையடுத்து மூன்று கிளையுடைய வேப்பம் கம்பினை பாலம்மாள்புரத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலின் பலி பீடம் எதிரே நட்டு வைத்தனர்.

    பின்னர் கம்பத்திற்கு மஞ்சள் தேய்த்து, வேப்பிலை சூட்டி அலங்கரித்து வைக்கப்பட்டது. இந்த கம்பத்திற்கு பக்தர்கள் தினமும் புனித நீரை எடுத்து வந்து குடம், குடமாக ஊற்றி வழிபட்டனர். கடந்த 18-ந்தேதி கரூர் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பூத்தட்டுகளை எடுத்து வந்து அம்மனுக்கு படைத்து பூஜை செய்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான கம்பம் ஆற்றில் விடுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்களும் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டனர். மதியம் 1.30 மணி வரை கம்பத்திற்கு புனித நீர் ஊற்ற அனுமதிக்கப்பட்டனர். அதன்பின் கோவில் நடை சாத்தப்பட்டது. பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படவில்லை.

    அதன்பின்னர் புனித நீர் ஊற்றி கோவிலை சுத்தம் செய்தனர். மாலை 4 மணிக்கு மேல் மீண்டும் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்து தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் கோவில் பலி பீடம் முன்பு உள்ள கம்பத்தில் வேப்பிலை மற்றும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

    அதைத்தொடர்ந்து கம்பத்தை ஆற்றுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. பக்தர்கள் கோவிலின் முன்புற பகுதியில் கம்பத்தை வழியனுப்ப திரண்டு நின்றனர். மாலை 5.15 மணியளவில் அம்மன் சன்னதி எதிரே இருந்த கம்பத்தை பூசாரி எடுத்து கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார். அப்போது விண்ணதிர மேள-தாளங்கள் முழங்கின. பின்னர் கோவிலின் முன்புற பகுதியில் தயார் நிலையில் இருந்த பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்திற்குள் கம்பம் வைக்கப்பட்டு ஊர்வலம் புறப்பட்டது.

    இரவு 7 மணியளவில் கம்பமானது பசுபதிபாளையம் அமராவதி ஆற்றங்கரையை அடைந்தது. மாவடி ராமசாமியாக அரிவாளுடன் முன்னே மருளாளி செல்ல அதனை பின்தொடர்ந்து கம்பம் ஆற்று பகுதிக்குள் சென்றது. அப்போது ஓம் சக்தி... பராசக்தி... என பக்தர்கள் கோஷம் எழுப்பி கம்பத்தை தொட்டு வணங்கினர்.

    பின்னர் அங்குள்ள மணல் திட்டில் கம்பம் நடப்பட்டு அதன் மீது மஞ்சள், குங்குமம் தூவி பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வெட்டி வைக்கப்பட்டிருந்த அகழியில் உள்ள புனிதநீரில் கம்பத்தை விட்டு மூழ்கடித்தனர்.

    அந்த சமயத்தில் பக்தர்கள் மீது அகழியில் இருந்த புனிதநீர் தெளிக்கப்பட்டது. மேலும் பக்தர்களும் கூட்டம் கூட்டமாக வந்து கம்பம் சென்ற இடத்தை கண்டு வழிபட்டு சென்றனர். பலரும் காலி பாட்டில்களில் அந்த நீரை பிடித்து எடுத்து சென்றனர். கம்பம் ஆற்றில் விடப்பட்டதும் கண்களை கவரும் வகையில் விதவிதமான வாண வேடிக்கை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
    ×